பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது


பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 Oct 2023 3:00 AM IST (Updated: 15 Oct 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் இன்று தொடங்குகிறது.

திண்டுக்கல்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பழனி முருகன் கோவிலில், இன்று மதியம் நடைபெறும் உச்சிக்கால பூஜையில், முருகப்பெருமான், துவார பாலகர்கள் உள்ளிட்டோருக்கு காப்புக்கட்டப்படுகிறது.

இதேபோல் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்படுகிறது. விழாவின் 9-ம் நாளான 23-ந்தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்திவேல், பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவில் மற்றும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவராத்திரி விழாவையொட்டி இன்று முதல் வருகிற 23-ந்தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story