சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா; 15-ந் தேதி தொடங்குகிறது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.
நவராத்திரி திருவிழா
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் புரட்டாசி மாதம் அமாவாசை மற்றும் மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி பாகவதம், அக்னி புராணம், தேவி மகாமித்யம் ஆகிய புராண கூற்றுகளின்படி, அதர்மமான மகிஷாசுரனை அழிக்க ஊசி முனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என 9 நாட்கள் கடும் தவம் புரிந்து 10-வது நாள் விஜயதசமியன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பாகும்.
அம்மன் அலங்காரம்
நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு வருகிற 15-ந்தேதி குமாரிகா, 16-ந்தேதி திரிமூர்த்தி, 17-ந்தேதி கல்யாணி, 18-ந்தேதி ரோகிணி, 19-ந்தேதி காளகா, 20-ந்தேதி சண்டிகா, 21-ந்தேதி சாம்பவி, 22-ந்தேதி துர்கா, 23-ந்தேதி சுபத்ரா, 24-ந்தேதி வேடுபறி அலங்காரம் நடைபெறும்.
இந்த நாட்களில் அம்மனை வழிபடுவதன் மூலம் பக்தர்களுக்கு வறுமை ஒழியும், தனதான்ய பலம் கிடைக்கும், பகை ஒழிந்து, கல்வி வளர்ச்சி பெற்று, துன்பம் நீங்கும். செல்வ வளர்ச்சி, ஷேம விருத்தி, பயம் நீங்குதல், சர்வ மங்களம் அடைதல், சகலதோஷ நிவர்த்தி, சகல காரிய அனுகூலம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்
வெள்ளிக்குதிரை வாகனம்
நவராத்திரி திருவிழாவில் வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நவராத்திரி உற்சவமும், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளில் அம்பாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நவராத்திரி உற்சவத்தின்போது, தினமும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 6 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி கோவில் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தினசரி இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.