தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி: கர்நாடகா, ராஜஸ்தான் அணிகள் சாம்பியன்


தினத்தந்தி 9 April 2023 12:00 AM IST (Updated: 8 April 2023 11:32 PM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், கர்நாடகா, ராஜஸ்தான் அணிகள் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றன.

பெரம்பலூர்

வாலிபால் போட்டி

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், மாவட்ட வாலிபால் சங்கம் ஆகியவை சார்பில் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் உட்கார்ந்து விளையாடும் வாலிபால் சாம்பியன்ஷிப் -2023 போட்டிகள் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. 2-வது நாள் போட்டிகள் நேற்று மாலை தொடங்கி இரவு வரை மின்னொளியில் நடந்தது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், கர்நாடகா, அரியானா, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இறுதி போட்டி

நேற்று இரவு நடந்த ஆண்களுக்கான இறுதிபோட்டியில் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் கர்நாடகா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. பெண்களுக்கான இறுதி போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநில அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் ராஜன், போட்டி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ராம்குமார் ஆகியோர் பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


Next Story