தேசிய அளவிலான கைப்பந்து போட்டி


தேசிய அளவிலான கைப்பந்து போட்டி
x

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கைப்பந்து போட்டி கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதனை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் கேரளா போலீஸ், சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஜி.எஸ்.டி., கர்நாடகா அணிகளும், பெண்கள் பிரிவில் கேரளா கே.எஸ்.இ.பி., கேரளா போலீஸ், சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஐ.சி.எப். ஆகிய அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வந்த நிலையில், 10-ந்தேதி இரவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை சென்னை ஜி.எஸ்.டி., அணியும், 2-ம் இடத்தை சென்னை எஸ்.ஆர்.எம். அணியும், 3-ம் இடத்தை கர்நாடகா அணியும், 4-ம் இடத்தை கேரளா போலீஸ் அணிகளும் பிடித்தன. இதேபோல் பெண்கள் பிரிவில் முதல் இடத்தை கேரளா கே. எஸ்.இ.பி. அணியும், 2-வது இடத்தை சென்னை ஐ.சி.எப்., அணியும், 3-வது இடத்தை கேரளா போலீஸ் அணியும், 4-வது இடத்தை சென்னை எஸ்.ஆர்.எம். அணிகளும் பிடித்தன. இதில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் வெற்றி கோப்பையும் 2, 3, 4-வதாக வந்த அணிகளுக்கு தலா ரூ.77,777, ரூ.70 ஆயிரம், ரூ.60 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையும், 2, 3, 4-வது வந்த அணிகளுக்கு ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டிகளை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு களித்தனர்.


Next Story