தேசிய அளவிலான ஆய்வு கூட்டம்
தேசிய அளவிலான ஆராய்ச்சி ஆய்வு கூட்டம் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் நடைபெற்றது.
வாசனை பயிர்கள் மேம்பாடு குறித்து தேசிய அளவிலான 16-வது ஆராய்ச்சி ஆய்வு கூட்டம் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு புதுடெல்லி வேளாண்மை மற்றும் விவசாய அமைச்சக தோட்டக்கலை ஆணையர் பிரபாத்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயக்குனர் செந்தில் வரவேற்றார். கேரள மாநிலம் கோழிக்கோடு பனை மற்றும் நறுமணப்பொருட்கள் மேம்பாட்டு இயக்குனர் டாக்டர் ஹோமி செழியன், வாசனை பயிர்களின் முக்கியத்துவம் மற்றும் உற்பத்தியின் தாக்கம் குறித்து விளக்கி கூறினார். இந்திய வாசனை பயிர்களின் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் தங்கமணி பேசியபோது, கோவிட் தொற்று நோய்க்கு பிறகு சர்வதேச சந்தையில் இந்திய வாசனை பொருட்களின் தேவையையும், உயர்நிலை மதிப்பு கூட்டல் மற்றும் புதிய தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் கூடுதல் ஆராய்ச்சி தேவையை வலியுறுத்தினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயக்குனர் சோமசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் செய்திருந்தார். ஆய்வு கூட்டத்தையொட்டி வாசனை பயிர்களின் தேசிய அளவிலான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வாசனை பயிர்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள் ஆகியவை இடம் பெற்றன.