தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மூலிகை கண்காட்சி
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நடைபெற்ற மூலிகை கண்காட்சியை மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் மருந்துகள், அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்து அங்கு வந்த நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மேலும் சித்த மருத்துவ மாணவ-மாணவிகளிடம் திணைகளின் நன்மைகள் பற்றி எடுத்துரைத்த அவர், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மனித உடலின் உள் உறுப்புகள் அனைத்தும் திணை வகைகளில் வடிவமைக்கப்பட்டிருந்ததை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
பின்னர் திணை வகைகளில் செய்த கைவினை பொருட்களை அவருக்கு மாணவ-மாணவிகள் பரிசாக வழங்கினர்.
திணை மற்றும் மருத்துவ தாவர கண்காட்சியில் திணை வகைகள், மருத்துவ தாவர வகைகள், பண்டைய காலத்தில் பாரம்பரிய முறையில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்திய பொருட்கள், சித்த மருத்துவ அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் திணை வகைகளில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், மனித உடலின் உள் உறுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.