தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை: ரூ.25-க்கு கிடைக்கிறது
‘இல்லந்தோறும் மூவர்ணம்' பிரசாரம்: தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை ரூ.25-க்கு கிடைக்கிறது.
சென்னை,
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் சுதந்திர திருநாள் அமுதப் பெரு விழாவின் ஒரு பகுதியாக மூவர்ண தேசியக் கொடியை வீடுகளுக்கு கொண்டுவரவும், மக்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு இல்லந்தோறும் மூவர்ணம் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது.
அதன்படி, தபால் அலுவலகங்களில் நாட்டின் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தபால் அலுவலகங்கள் இந்த கொடியை ரூ.25 என்ற விலையில் மக்களுக்கு விற்பனை செய்கிறது.
சென்னை மண்டலத்தில் உள்ள 20 தலைமை தபால் அலுவலகங்கள், 545 துணை தபால் அலுவலகங்கள், 1,626 கிளை தபால் அலுவலகங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 191 தபால் அலுவலகங்களிலும் இந்த கொடி விற்பனைக்கு இருக்கிறது.
கொடிகளை சில்லரையாகவோ அல்லது மொத்தமாகவோ வாங்க பொது மக்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும், மேலும் www.epostoffice.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் ஆன்லைன் வாயிலாக பெறலாம் என்றும் சென்னை நகர மண்டல தபால் துறை தலைவர் நடராஜன் தெரிவித்தார்.