நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.40 கோடி வங்கி கடன் நாசர், விஷால், கார்த்தி கூட்டாக பேட்டி
நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்குவோம் என்றும், திரையுலகினரிடம் நிதி கோருவோம் என்றும் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கூறினார்கள்.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.
கட்டிட நிதி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பொருளாளர் கார்த்தி பேசினார். தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு வங்கி கடன், திரையுலகினரிடம் இருந்து நிதி திரட்டுதல், நட்சத்திர கலைவிழா நடத்துதல் தொடர்பாக பொதுச்செயலாளர் விஷால் ஒப்புதல் பெற்றார்.
கூட்டாக பேட்டி
கூட்டத்தில் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் மற்றும் குஷ்பு, லதா, சச்சு, ராஜேஷ், பசுபதி, அஜய் ரத்தினம், கோவை சரளா, விக்னேஷ், சரவணன், நந்தா, ஹேமச்சந்திரன், ஸ்ரீமன், பிரேம்குமார், தளபதி தினேஷ், எம்.ஏ.பிரகாஷ், வாசுதேவன், ரத்தின சபாபதி, காளிமுத்து உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நடிகர் சங்க கட்டிடத்தில்...
எங்கள் மீதான நம்பிக்கையில் 2-வது முறையும் தேர்வு செய்தனர். எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றி விட்டோம். மிச்சமுள்ள ஒரே கோரிக்கை நடிகர் சங்க கட்டிடம் மட்டுமே. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.
குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அடுத்த பொதுக்குழு கூட்டம், நமது சொந்த கட்டிடத்தில்தான் நடைபெறும் என்பதை பொதுக்குழு உறுப்பினர்களும் நம்புகிறார்கள். நாங்களும் நம்புகிறோம்.
அவகாசம் கொடுத்திருந்தால்...
தேர்தல் நடத்திடாமல் ஒரு 5 மாத அவகாசம் கொடுத்திருந்தார்கள் என்றால், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்திருப்போம். ஆனால் தேர்தல் நடந்தது. அடுத்ததாக கொரோனா பேரிடர் வந்தது. இதனால் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ள அந்த கட்டிடத்தில் உள்ள இரும்பு உள்ளிட்டவை துருப்பிடித்து போயிருக்கிறது.
இப்போது நடந்த கூட்டத்தில் உரிய வங்கி கடனுடன் கட்டிடத்தை கட்டி முடிக்க உறுதியேற்றுள்ளோம். இது இந்தியாவே திரும்பி பார்க்கும் கட்டிடமாக அமையும். பல்வேறு இடையூறுகளை தாண்டி இந்தமுறை கட்டிடத்தை நிறைவு செய்து காட்டுவோம்
ரூ.40 கோடி வாங்க தகுதி
கட்டிடம் கட்ட வங்கி மூலமாக கடன் பெறுவோம். 200 பேர் பணியாற்றும் ஒரு கட்டிடத்துக்கு மாதந்தோறும் ரூ.2 கோடி வரை செலவு இருக்கும். எனவே கையில் பணம் வைத்துக்கொண்டு தான் இதையெல்லாம் செய்யவேண்டும். கொரோனாவுக்கு பிறகே கட்டுமான பொருட்கள் 30 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது. எனவே வங்கி நிதி வந்தவுடன், கட்டிட பணிகள் தொடங்கும்.
வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க தகுதி உள்ளது. இந்த தொகையை முழுவதும் செலவிடுவோம் என்று சொல்ல வரவில்லை. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தொகையை வாங்க இருக்கிறோம். எல்லா நடிகர்-நடிகைகளிடம் நிதி கேட்போம்
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.