நம்பெருமாள் ஜீயபுரம் புறப்பட்டார்


நம்பெருமாள் ஜீயபுரம் புறப்பட்டார்
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையாட்டி நம்பெருமாள் ஜீயபுரம் புறப்பட்டு சென்றார். இன்று நம்பெருமாள் மூதாட்டியிடம் பழைய சோறு சாப்பிட உள்ளார்.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையாட்டி நம்பெருமாள் ஜீயபுரம் புறப்பட்டு சென்றார். இன்று நம்பெருமாள் மூதாட்டியிடம் பழைய சோறு சாப்பிட உள்ளார்.

தேர்த்திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனிதேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

விழாவின் 2-ம் நாளான நேற்று நம்பொருமாள் கண்ணாடி அறையிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள கருடமண்டபத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்தார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு கண்ணாடி அறைக்கு மாலை 5.30 மணிக்கு சென்றடைந்தார். பின்னர் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து இரவு 9 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு மேலூரில் வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரியாறு வழியாக இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைவார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

மூதாட்டியின் பக்தி

ஜீயபுரத்தில் ரெங்கநாதரை சர்வ காலமும் நினைத்து வாழும் ஒரு மூதாட்டி இருந்து வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரெங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பேரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, சதா சர்வகாலமும் ரெங்கா என்றே வாழ்ந்து வந்தார். ரெங்கநாதர் மீது அவர் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.

இதனிடையே பாட்டியின் பேரன் முகம் திருத்தி கொண்டு வருவதாக சொல்லிவிட்டு காவிரி கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான். அப்போது திடீரென காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாட்டியின் பேரன் ரங்கன் இழுத்து செல்லப்பட்டான். நேரமாகியும் திரும்பாத பேரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். ரெங்கநாத பெருமாளை தொழுது, அழுது காவிரி கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி வெள்ளத்தில் இழுத்து சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மாமண்டபத்திற்கு அருகே கரை ஒதுங்கினான்.உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து பெருமாளை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்து. தன்னை காணாது பாட்டி அழுவாள் என ரெங்கநாதரிடம் முறையிட்டான்.

பழைய சோறு

காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பி கொண்டிருந்த பாட்டியை ஆறுதல் படுத்த நம்பெருமாள் புறப்பட்டார். பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயபுரத்து காவிரி கரை அருகே முகத்திருத்தம் செய்து முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பேரன் உருவில் ரங்கனாக வந்தார் நம்பெருமாள். பேரனை கட்டி மகிழ்ந்து வீட்டிற்கு கூட்டி சென்றார். பசித்திருந்த பேரனுக்கு பழைய சோறும், மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். நம்பெருமாள் சாப்பிட்டு கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பேரன் ரங்கன் அங்கே வர பாட்டி திகைப்படைந்தாள். அப்போது நம்பெருமாள் சிரித்தப்படியே மறைந்தார். பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் சாப்பிட்டார் ரெங்கநாத பெருமாள். இன்றும் அதனை நினைவூட்டும் வகையில் ஆண்டு தோறும் பங்குனி தேர் திருத்திருவிழாவில் இதை நடத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த விழா இன்று ஜீயபுரத்தில் நடக்கிறது.


Next Story