நாமக்கல் வன்முறை சம்பவம்: காங்கிரஸ் சார்பில் உண்மை கண்டறியும் குழு-கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் பகுதியில் உண்மை நிலையை கண்டறிய, தமிழக காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த மார்ச் 11-ந் தேதி நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்திற்கு அருகில் உள்ள கரப்பாளையத்தில் நித்யா என்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்ததையொட்டி, அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது. மேலும், அந்த பெண் அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அப்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினரும், அச்சமுதாய மக்களும் உடலை வாங்க மறுத்து விட்டனர். பிறகு காவல்துறையினரின் சமரச முயற்சியின் காரணமாக சடலத்தை பெற்றுக் கொண்டனர். ஆனால், அதனைத் தொடர்ந்து சில விரும்பத்தகாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே, பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் பகுதியில் உண்மை நிலையை கண்டறிய, தமிழக காங்கிரஸ் சார்பில் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பி.ஏ.சித்திக், பி.செல்வகுமார், எஸ்.கே.அர்த்தனாரி, எம்.பி.எஸ்.மணி, வி.பி.வீரப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேச்சேரி ஆர். பழனிச்சாமி ஆகியோரைக் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் அந்தப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வன்முறைக்கான காரணத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கண்டுணர்ந்து அதற்கான தீர்வு அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.