நாமக்கல்: கடைகளின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடும் வடமாநில கும்பல் - வியாபாரிகள் அதிர்ச்சி


நாமக்கல்: கடைகளின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடும் வடமாநில கும்பல் - வியாபாரிகள் அதிர்ச்சி
x

நாமக்கல்லில் கடைகளின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடும் வடமாநில கும்பலால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே சிவா என்பவர் டி.வி, வாஷிங்மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ந் தேதி நள்ளிரவு இவரது ஷோரூம் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றனர்.

இது தொடர்பாக அவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து ஒருநபர் கடைக்குள் வந்து, பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநில கும்பல்

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்- சேலம் சாலையில் செல்போன் ஷோரூமில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் சுமார் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர். நாமக்கல்-பரமத்தி சாலையில் ரேடிமேட் கடையில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் ரூ.53 ஆயிரத்தை திருடி சென்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இந்த 3 சம்பவங்களிலும் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

போலீசார் இரவு ரோந்த

ஒருவர் உள்ளே சென்று பணத்தை கொள்ளை அடிப்பதும், மற்றொருவர் வெளியில் காவலுக்கு நிற்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுபோன்று தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் போலீசார் இரவு ரோந்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story