நாமக்கல் தனியார் ஓட்டலில்'சவர்மா' வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலிதாய், உறவினர்கள் 4 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


நாமக்கல் தனியார் ஓட்டலில்சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலிதாய், உறவினர்கள் 4 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 19 Sept 2023 12:30 AM IST (Updated: 19 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் 'சவர்மா' வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய தாய், தம்பி உள்பட 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் ஓட்டல்

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 38). இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகள் கலையரசி (14), மகன் பூபதி (12) ஆகியோருடன் வசித்து வந்தார். கலையரசி நாமக்கல் கோட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு நாமக்கல்லில், பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற ஓட்டலில் சுஜாதா குடும்பத்துடன் சென்று 'சவர்மா', தந்தூரி சிக்கன் உள்பட பல்வேறு உணவு பொருட்களை வாங்கினார். பின்னர் அவர்கள் உணவு பார்சல்களை வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கலையரசிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சுஜாதா தனது மகளை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்றார். பின்னர் சிகிச்சை முடிந்து இரவு மாணவியை அவரின் தாயார் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

சாவு

இந்த நிலையில் இரவில் வீட்டில் தூங்கிய கலையரசி நேற்று காலை உடல் அசைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை எழுப்பி பார்த்தும் எழுந்திருக்கவில்லையாம். மேலும் சுஜாதா, பூபதி, உறவினர்கள் சினோஜ், கவிதா ஆகியோருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கலையரசியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட சுஜாதா, தம்பி பூபதி, அத்தை கவிதா, மாமா சினோஜ் ஆகியோர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை

அவர்களை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் 4 பேரும் எந்த உணவை சாப்பிட்டார்கள் என்பதை கேட்டறிந்தார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 'சவர்மா' உள்ளிட்ட அசைவு உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி இறந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை

கடந்த 16-ந் தேதி இதே ஐவின்ஸ் ஓட்டலில் 'சவர்மா' மற்றும் பிரைடு ரைஸ் சாப்பிட்டு ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் உத்தரவின்பேரில் ஐவின்ஸ் ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அன்றைய தினமே `சீல்' வைத்தனர். இந்த நிலையில் அதே ஓட்டலில் 'சவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி இறந்த சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story