நலிவடைந்து வரும் லாரி, ரிக் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி


நலிவடைந்து வரும்  லாரி, ரிக் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நலிவடைந்து வரும் லாரி, ரிக் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம்

நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க. சார்பில் நலிவடைந்து வரும் லாரி, ரிக் வண்டி, கோழிப்பண்ணை மற்றும் விவசாயத்தை பாதுகாக்க பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் துரை வரவேற்றார். சின்ராஜ் எம்.பி, முன்னிலை வகித்தார். கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை மாநில தலைவர் தேவராசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கச்சா எண்ணெய் விலை சரிவு

கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஆனால் டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. தொடர்ந்து நலிவடைந்து வரும் லாரி, ரிக் வண்டி, கோழிப்பண்ணை மற்றும் விவசாயத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கொங்கு மண்டலம் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்க லாரி, ரிக் வண்டி, கோழிப்பண்ணை மற்றும் ஜவுளி தொழில், விவசாயம் ஆகியவை முக்கியமானதாகும். இவை அனைத்தும் தற்போது சிக்கலில் இருக்கிறது. மத்திய அரசின் கொள்கை முடிவுகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆன்லைன் வழக்குகள்

லாரி தொழிலை பாதுகாக்க இந்தியாவில் உள்ள லாரி சங்க தலைவர்களை டெல்லிக்கு அழைத்து மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரி கூட்டத்தை கூட்டி அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற முன் வரவேண்டும். ஆன்லைன் வழக்குகளில் தவறே நடக்காதபோது தண்டனை வருவது விசித்திரமாக இருக்கிறது. எனவே ஆன்லைன் வழக்குகளை நிறுத்த வேண்டும். அதை மாநில அரசு செய்ய வேண்டும் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி, விவசாய அணி துணை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர்கள் ராஜவேல், பூபதி, செல்வராஜ், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் அசோகன் மற்றும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள், கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள், கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர்மன்ற உறுப்பினர் பழனிசாமி நன்றி கூறினார்.


Next Story