நல்லாறு அணையை கட்ட வேண்டும்


நல்லாறு அணையை கட்ட வேண்டும்
x
திருப்பூர்


பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறையை போக்க நல்லாறு அணையை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மனுக்கள் அளித்து கோரிக்கைகளை தெரிவித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன்:-

தமிழ்நாடு அரசு 31-1-2021 வரை நிலுவையில் உள்ள பயிர் கடன்கள் தள்ளுபடி என அரசாணை வெளியிட்டது.

இதையறிந்து கொள்ளாமல் விவசாயிகள் ஒரு பகுதியினர் அரசு வழங்கும் வட்டிச்சலுகை கிடைக்கும் என்ற காரணத்தினால் வெளியில் கடன் பெற்று கூட்டுறவு சங்கத்துக்கு கடனை செலுத்தியுள்ளனர். அவ்வாறு செலுத்தியவர்களுக்கும் 31-1-2021 வரை பயிர்கடன் நிலுவையில் இருந்த காரணத்தால் கடன்தள்ளுபடி பட்டியலில் சேர்த்து கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையும், கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனால் அந்த தொகையை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யாமல் இதுநாள் வரை இருந்து வருகிறது. விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கியுள்ளவர்களுக்கு பயிர்கடன் தள்ளுபடி தொகையை திரும்பி வழங்காமல் காலம் கடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கூட்டுறவுத்துறையினர் எந்தவித முறையான தகவல்களும் தெரிவிக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து கலெக்டர் தலையிட்டு, விவசாயிகளுக்கு அரசின் ஆணைப்படி கிடைத்த உதவியான பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்படி, தள்ளுபடியான தொகையை வழங்க வேண்டும்.

நல்லாறு அணை

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் மூலம்விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேல்நீராற்றில் இருந்து குழிப்பட்டி மலை கிராமத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள நல்லாற்றை நோக்கி 14.40 கிலோ மீட்டர் நீளம் சுரங்கம் அமைத்து நல்லாற்றின் குறுக்கே அணை கட்டினால் அங்கிருந்து 3.52 கிலோ மீட்டர் நீளத்தில் ஒரு வாய்க்கால் வெட்டினால் திருமூர்த்தி அணைக்கு 6 மணி நேரத்தில் தண்ணீர் வந்து சேரும்.

நல்லாறு அணையில் 7.5 டி.எம்.சி. தண்ணீரை தேக்க முடியும். ஆண்டுதோறும் மேல்நீராற்றில் சராசரியாக கிடைக்கும் 9 டி.எம்.சி. நீரும் மேல்நீராறு அணையில் இருந்து உபரியாக செல்லும் நீரை பயனுள்ளதாக மாற்றம் செய்யும் திட்டமே நல்லாறு அணை திட்டமாகும். பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறையை போக்க, 15 லட்சம் மக்களின் தாகம் தீர்க்கவும், பல கோடி தென்னை மரங்களை காக்கவும், திருமூர்த்தி அணைக்கு பருவகாலங்களில் உடனே நீர் கிடைக்கவும் நல்லாறு அணை அமைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story