கிறிஸ்துமஸ் பண்டிகையால் களைகட்டும் விழுப்புரம் நகரம்நட்சத்திரங்கள், குடில் பொம்மைகள் விற்பனை


கிறிஸ்துமஸ் பண்டிகையால் களைகட்டும் விழுப்புரம் நகரம்நட்சத்திரங்கள், குடில் பொம்மைகள் விற்பனை
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையால் விழுப்புரம் நகரம் களைகட்ட தொடங்கியுள்ளது. நட்சத்திரங்கள், குடில் பொம்மைகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி விழுப்புரம் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் பார்வையாளர்களை கவரும் வகையில் விதவிதமான வண்ணங்களில், கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனைக்காக தொங்க விடப்பட்டுள்ளன. இதேபோல் கிறிஸ்துமஸ் மரம், குழந்தைகளை கவரும் கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், பலவிதமான அலங்கார விளக்குகளும், வாழ்த்து அட்டைகள் மற்றும் ஏராளமான பரிசு பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

குடில் பொம்மைகள்

மேலும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் குடில்கள் அமைப்பதற்காக விழுப்புரம் நகரில் குடில் பொம்மைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் குடில் பொம்மைகள் தயாரிக்கப்பட்டு விழுப்புரத்திற்கு விற்பனைக்காக வந்துள்ளன. 6 சிறிய பொம்மைகள் கொண்ட ஒரு ஜோடி குடில் பொம்மைகள் ரூ.400-ல் இருந்து ரூ.600 வரையும், பெரிய அளவிலான பொம்மைகள் ஜோடி ரூ.750-ல் இருந்து ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் அந்த பண்டிகையை கொண்டாட விழுப்புரம் நகரில் உள்ள கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர். அதுபோல் புதிய துணிமணிகள் வாங்க ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

போக்குவரத்து நெரிசல்

இதன் காரணமாக விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடைவீதிகள் மற்றும் ஜவுளிக்கடைகளுக்கு சென்று விட்டு திரும்பும் மக்களால் விழுப்புரம் நேருஜி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் மிகவும் சீரான வேகத்தில் சென்றன. அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து வாகன போக்குவரத்தை சரிசெய்தபோதிலும் பல மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது.


Next Story