நாகர்கோவிலில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி
நாகர்கோவிலில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தொழில் அதிபர்
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் உள்ள சகோதரர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60), தொழில் அதிபர். இவர் குடும்பத்தோடு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு சென்றார்.
நேற்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை அருகில் வசிப்பவர்கள் பார்த்து, விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கோட்டார் போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது விஜயகுமார் வீட்டின் முன்பக்க கதவு, படுக்கை அறை கதவு ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவையும் உடைத்து உள்ளனர். அங்கு 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் இருந்த பையை மட்டும் எடுத்து சென்று அருகில் போட்டு விட்டு சென்று விட்டனர்.
திருட முயற்சி
வீட்டு கதவு உடைக்கப்பட்டதை அறிந்ததும், சென்னையில் இருந்து விஜயகுமார் ஊருக்கு வந்தார். அவர் வீட்டில் உள்ள பொருட்களை சரிபார்த்த போது, நகை-பணம் திருட்டு போகவில்லை என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
விஜயகுமார் சென்னைக்கு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள்தான் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். எனவே இந்த திருட்டு முயற்சியில் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பு
வெள்ளாடிச்சிவிளை பகுதியில் இரு தினங்களுக்கு முன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இதற்கிடையில் தற்போது மேலும் ஒரு திருட்டு முயற்சி நடந்து இருப்பது நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---