தற்கொலை செய்து கொண்ட ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளா் நாகலட்சுமி மகள் பாம்பு கடித்து பலி
பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளா் நாகலட்சுமி மகள்களை பாம்பு கடித்தது ஒரு சிறுமி பலியானார்
மதுரை
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி (வயது31). இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்ஷினி (10), தேன்மொழி (9), சண்முகப்பிரியா (5), பாண்டி சிவானி (4) என்ற 5 பெண் குழந்தைகள் உள்ளன.
கணேசன் கோவையில் உள்ள பஞ்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் மகள்களை பார்த்து செல்வார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள நாகலெட்சுமி, தனக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி வேலைவாய்ப்பு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதன்பேரில் அவரது கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணி அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 1½ ஆண்டுகளாக அந்த பணியில் அவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது 2 பெண் குழந்தைகளுடன் மையிட்டான் பட்டியில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சில் வந்த நாகலட்சுமி, ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில், உறவினர்களின் பராமரிப்பில் இருந்த ஐந்து குழந்தைகளில், இரண்டு குழந்தைகளை பாம்பு கடித்ததாகவும், அதில் 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், 4 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், 9 வயது சிறுமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.