நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைப்பு


நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைப்பு
x

நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாகை,

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியும் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. முதல் நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை என கூறப்பட்டது. இதனையடுத்து கனமழையால் இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இத்தகைய சூழலில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானதாகும்.

கோடை விடுமுறையையொட்டி அதிகளவில் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே10 ஆம் தேதி நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வராததால், போக்குவரத்து 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை தற்போது 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர். அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் வரும் 19-ம் தேதி தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Next Story