மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் 'நான் முதல்வன்' திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் நான் முதல்வன் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

லண்டனில் பெற்ற அனுபவங்களை முதல்-அமைச்சரிடம் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

சென்னை,

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். லண்டனில் பெற்ற அனுபவங்களை முதல்-அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல. நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன். அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி.

நாடும் நாமும் பெருமையடையக் கற்போம். கல்வியை விடச் சிறந்த செல்வம் ஏதுமில்லை எனக் கற்பிப்போம். கல்வியே பெருந்துணை எனத் தடைகளை உடைத்து வெற்றிநடை போடுவோம்."

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story