காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்திவரும் மத்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் இனியன் ஜான், நிர்வாகிகள் இடும்பவனம் கார்த்தி, பாத்திமா பர்கானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து சீமான் கண்ட உரையாற்றினார்.
பின்னர், சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் பேசுகிறார்
ஒரே நாடு, ஒரே வரி என்று பேசும் இந்த நாட்டில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற முடியவில்லை. ஒவ்வொரு முறையும் போராடி நீதிமன்றம் சென்றுதான் காவிரி நீரை பெற முடியும் என்றால் நாடாளுமன்றமும், சட்டமன்றமும் எதற்கு என்ற கேள்விதான் எழுகிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள 2 கட்சிகள் காவிரி நதி நீருக்காக அடித்துக்கொள்கிறது என பிரதமர் மோடி பேசுகிறார். காவிரி நதிநீர் பிரச்சினைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல பிரதமர் பேசுகிறார். காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தர வேண்டிய பொறுப்பும், கடமையும் தனக்கு இருக்கிறது என்பதை பிரதமர் மறந்துவிட்டார். கர்நாடகாவில் தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களின் உரிமையை பலியிட காங்கிரஸ், பா.ஜ.க. தயாராக இருக்கிறது.
தலைவன் இல்லாத நாடு
இதே நிலை நீடித்தால் காவிரி என்ற ஒரு ஆறு இருந்ததையே நாம் மறந்துவிட வேண்டியதுதான். அனைத்து பக்கமும் தமிழர்களை வஞ்சித்து வீழ்த்துவதற்கான சூழ்ச்சிகள்தான் நடந்து வருகிறது. காவிரி நதி நீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபோதும் கர்நாடக அரசு தர மறுக்கிறது. ஒரு மாநிலத்திற்கு ஒரு கொள்கை முடிவை எடுக்கும் காங்கிரஸ் கட்சியை நாம் என்னவென்று சொல்வது. தகப்பன் இல்லாத வீடு எப்படி இருக்குமோ அதுபோல தான் தலைவன் இல்லாத நாடும் இருக்கும். தலைவன் இல்லாத நாடாக இது மாறிவிட்டது.
தமிழகத்தில் உள்ள நடிகர்கள் காவிரி நதிநீருக்காக போராடினால் ஆளும் அரசுக்கு எதிராக பேச வேண்டியது வரும். பின்னர், அவர்களுக்கு தியேட்டரில் படம் வெளியிட முடியாது. அதனாலேயே பேசாமல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத கட்சியை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவிடாமல் செய்வதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். அப்போதுதான் நமக்கு தண்ணீர் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.