ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கி பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக நடவடிக்கைகளை அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதேவேளை, அதிமுக வேட்பாளர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதேவேளை, பாஜகவும் இந்த இடைத்தேர்தலில் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விட்டு தருவோம் இல்லையேல் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இடைத்தேர்தலில் மேனகா போட்டியிடுவார் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.


Next Story