மரங்களை வெட்டும் மர்ம கும்பல்
பழனி-தேக்கந்தோட்டம் சாலையில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் மரங்களை வெட்டி வருகின்றனர்.
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் தேக்கந்தோட்டம் வரை சாலையிலும், அதையடுத்து மலைப்பாதையும் உள்ளது. இதில் பழனி-தேக்கந்தோட்டம் இடையே சாலையோரம் இருபுறமும் வாகை, புளி உள்ளிட்ட மரங்கள் உள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வெயிலின் தாக்கம் தெரிவதில்லை. அதேபோல் வெயில் காலத்தில் சாலை வழியே செல்லும் போது மக்கள் மரங்களுக்கு அடியில் இளைப்பாறி செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேக்கந்தோட்டம் சாலையோர மரங்களை மர்ம நபர்கள் வெட்டி செல்லும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆலமரத்துகளம் அருகில் பழமையான புளியமரத்தை மர்ம நபர்கள் வேராடு வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, மரம் வெட்டியது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவர் மீது கடும் நடடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொதுமக்கள் கூறுகையில், சாதாரண மக்கள் யாராவது மரத்தில் ஒரு கிளையை வெட்டினால் உடனடியாக அதிகாரிகள் வந்து அபராதம் விதிக்கின்றனர். ஆனால் சாலையோரம் உள்ள மரத்தை வேரோடு சாய்த்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.