12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்: தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் - எடப்பாடி பழனிசாமி


12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்: தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரத்தில், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம்-செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி என்பவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்ததாகவும், அவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அன்பு மகளை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நியாயமான விசாரணை

இந்த செய்தியை அறிந்த உடன், கட்சியின் சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழிதேவனை நேரில் சென்று, அந்த குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறும்படி அறிவுறுத்தினேன்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அனைவரது சந்தேகங்களையும் போக்கும் வகையில், நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு, தவறு இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத்தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story