மாயமான 100 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
நெல்லை மாவட்டத்தில் மாயமான 100 செல்போன்கள் மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாயமான செல்போன்கள் குறித்தும், திருடு போன செல்போன்களை கண்டிபிடித்து தரக்கோரியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதனையடுத்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண் உள்ளிட்ட தகவல்களை வைத்து செல்போன்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதன்படி 100 செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரமா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.