மாயமான கல்லூரி மாணவியை மீட்டு தரக்கோரி திருநங்கைகள் திடீர் சாலை மறியல் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு


மாயமான கல்லூரி மாணவியை மீட்டு தரக்கோரி திருநங்கைகள் திடீர் சாலை மறியல் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x

மாயமான கல்லூரி மாணவியை மீட்டு தரக்கோரி திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு

மாயமான கல்லூரி மாணவியை மீட்டு தரக்கோரி அம்மாபேட்டையில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ேமலும் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தையும் திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவி மாயம்

அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 23-ந் தேதி அன்று வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை வலைவீசி தேடி வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் காணாமல் போன மாணவியை ஒரு வாரம் ஆகியும் கண்டுபிடித்து தரவில்லை என கூறி மாணவியின் உறவினரான திருநங்கை ஒருவருடன் 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று சேர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள மேட்டூர் - பவானி ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் என்றும், இதுகுறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதையடுத்து திருநங்கைகள் அனைவரும் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் திருநங்கைகள் கூறுகையில், 'காணாமல் போன மாணவியை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும்,' என்றனர். அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், 'காணமால் போன மாணவியை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த திருநங்கைகள் மாலை 5.30 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அம்மாபேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அம்மாபேட்டை போலீஸ் நிலையம் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story