தமிழக இளைஞர்களை உலகளவில் முதன்மையானவர்களாக மாற்றுவதே எனது லட்சியம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சி வளர்ந்த பின்னர் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
நான் முதல்வன் திட்டம் எனது கனவு திட்டம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வளர்ந்த பின்னர் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகிறது. அனைத்து தரப்பினரும் வளர்ந்து வருகிறார்கள்.
மாணவர்கள், இளைஞர்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த திட்டம் காரணமாக உள்ளது. நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கருணாநிதி. நான் முதல்வன் திட்டம் இளைஞர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் 1.5 லட்சம் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
நெஞ்சில் நிறைவும், முகத்தில் மகிழ்ச்சியும் பொங்க உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துகள். ஐஏஎஸ் அதிகாரி இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நான் முதல்வன் திட்டம் தலைமுறை தலைமுறையாக பயன்படும் திட்டம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது தான் இலக்கு. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த நிறுவங்களில் வேலை கிடைத்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க இந்த திட்டம் வழிவகை செய்துள்ளது. படிக்கும் போதே மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு தான் இந்த திட்டம்.
அடுத்த மாதம் நடைபெறும் தமிழ்நாடு திறன் போட்டிகளுக்கு இதுவரை 58,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல, திறமையும் சார்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.