மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க இலங்கை அரசுடன் பரஸ்பர பேச்சுவார்த்தை - மத்திய மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க இலங்கை அரசுடன் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்வது கவலை அளிக்கிறது.
கடந்த 10-ந் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது படகையும் கைப்பற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து 12 நாட்களுக்குள் 22-ந் தேதி இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் மீன்பிடி படகை கைப்பற்றி கைதானவர்களை திருகோணமலையில் சிறையில் அடைத்த மற்றொரு சம்பவமும் அரங்கேறி உள்ளது.
இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தொடர் நிகழ்வாகி வருகிறது. இது, மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழக மீனவர்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் செயல்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களின் உயிருக்கும் , உடமைக்கும் உத்தரவாதம் இல்லை என்ற உணர்வை உருவாக்கி உள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினரும், பல்வேறு மீனவர் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க, இலங்கை அரசுடன் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.