முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பாளையங்கோட்டை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் நேற்று அதிகாலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 1-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. அன்று மாலை தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து யாகசாலை பிரவேசத்துடன், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் 2-ம் கால யாகசாலை பூஜையும், இரவில் 3-ம் கால யாகசாலை பூஜையும், மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளுக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
நேற்று அதிகாலை மூர்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம் மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 6 மணி அளவில் விமானம், முத்தாரம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, இரவில் அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.