முத்தாரம்மன் கோவில்தசரா திருவிழாபக்தர்களின் வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
முத்தாரம்மன் கோவில்தசரா திருவிழா பக்தர்களின் வேடப்பொருட்கள்தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முனனிட்டு பக்தர்கள் வேடம் அணியும் கீரிடம், சடை மூடி உள்ளிட்ட பொருட்கள் தாயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பொருட்கள் விற்பனை உடன்குடியில் சூடுபிடித்துள்ளது.
தசரா திருவிழா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற அக்., 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக்.24-ந்தேதி நடக்கிறது, இதில் நாடு முழுவதும் இருந்து பல லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதில் பல்வேறு நோய்கள், தொழில் முடக்கம், குடும்ப பிரச்சினைகள் தீர அம்மனுக்கு நேர்த்தி கடனாக காளி, கருப்பசாமி, அம்மன், சிவன், கிருஷ்ணன், விநாயகர், முருகன், பண்டாரம் குரங்கு, கரடி புலி, சிங்கம், குறவன், குறத்தி, பெண், போலீஸ், திருடன், பிச்சைக்காரன் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிப்பர். இந்த காணிக்கையை அந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு செலுத்தி வழிபடுவர்.
வேடப்பொருட்கள் தயாரிப்பு
இதில் காளி வேடம் அணியும் பக்தர்கள் 61,41, 21, 11, 5 நாட்கள் என தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விரதம் இருப்பார்கள். ஏற்கனவே ஏராளமான பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். திருவிழா தொடங்க இன்னும் 15 நாட்களே இருப்பதால் தற்போது அனைவரும் கடலில் குளித்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். இந்த பக்தர்கள் வேடம் அணியும் கீரிடம், சடை முடி, சூலாயுதம், நெற்றி பட்டை, கண்மலர், வீரபல் இடுப்பு ஒட்டியானம், போன்றவை உடன்குடியில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி தற்போது தீவிரமாக நடக்கிறது. ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விற்பனை மும்முரம்
கடந்த சில நாட்களாக இந்த பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் உடன்குடிக்கு வந்து வேடப்பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிக அளவில் பக்தர்கள் வேடப்பொருட்களை வாங்கி செல்வதாகவும், தொடர்ந்து வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்டர் கொடுத்து வருவதாகவும், இந்த பொருட்களை தயாரித்து வரும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.