முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்


முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

அரிமளம் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோவில்

அரிமளம் அருகே ராயவரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மண்டகபடிதாரர்கள் சார்பில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை மாலைகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பல்லக்கில் வீதி உலா

6-ம் நாளில் பனை ஓலை சப்பர திருவிழா நடைபெற்றது. இதற்காக பனை ஓலை, மலர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி ராயவரம் -அரிமளம் சாலை, ராயவரம் பஸ் நிறுத்தம், சிவன், பெருமாள் கோவில் ஊரணி வழியாக சப்பரம் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருள வீதி உலா நடைபெற்றது.

தேரோட்டம்

இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேேராட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து முத்துமாரியம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story