எழுமலையில் 18 கிராம மக்கள் கொண்டாடிய முத்தாலம்மன் கோவில் திருவிழா- விடிய, விடிய சிலை எடுப்பு கோலாகலம்
எழுமலையில் 18 கிராம மக்கள் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை கொண்டாடினர். விடிய, விடிய சிலை எடுப்பு கோலாகலமாக நடந்தது.
உசிலம்பட்டி,
முத்தாலம்மன் கோவில்
உசிலம்பட்டி அருகே எழுமலையில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவது வழக்கம். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் திருவிழா தொடங்கியது.
முதல் நாள் நிகழ்வாக நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் எழுமலை முத்தாலம்மன் கோவிலில் இருந்து முத்தாலம்மன் சப்பர தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக உலா வந்தது. எழுமலை தேவர் சிலையில் அருகில் சப்பர தேர் நிலை நிறுத்தப்பட்டது.
பின்னர் எழுமலை மேற்குத்தெருவில் செய்யப்பட்ட 10 சிலைகளையும் இ.பெருமாள்பட்டி, நல்ல தாதுநாயக்கன்பட்டி, சங்க கவுண்டன்பட்டி, தச்சப்பட்டி, உத்தப்புரம் மேற்குத்தெரு, காமாட்சிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, எழுமலை ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து அவரவர் ஊருக்கு முத்தாலம்மன் சிலையை எடுத்துச் சென்றனர்.
சிலை எடுப்பு
அதன் பின்னர் இ.கோட்டைப்பட்டியில் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை அம்மாபட்டி, இ.கோட்டைப்பட்டி, வடக்கத்தியான்பட்டி, ஆகிய ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. நல்லமநாயக்கன்பட்டி சீல் நாயகன்பட்டி பேரையம்பட்டி ஆகிய ஊர்களுக்கும் சிலை அந்தந்த பகுதிகளில் செய்யப்பட்டு முத்தாலம்மன் சிலை எடுத்துச் செல்லப்பட்டு அந்த அந்தந்த கிராமங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்..
இதனை தொடர்ந்து எழுமலை முத்தாலம்மன் கோவில் சிலையை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவிலுக்கு சென்றடைந்தது.விடிய விடிய நடைபெற்ற இந்த சப்பரத்தேர் ஊர்வலம், சிலை எடுப்பு நிகழ்வில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் நேற்று மாலையில் எழுமலை முத்தாலம்மன் கோவிலில் இருந்து சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
எதிர்சேவை நிகழ்ச்சி
பின்னர் எழுமலை- ஆத்தங்கரைப்பட்டி சாலையில் உள்ள கண்மாய் கழுங்கி அருகில் எதிர் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி. ரம்யாபாரதி, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் ஆகிேயார் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.