ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

அரியலூர்

உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்று. முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் மாத நோன்பை கடைபிடிக்கும் விதமாக புனித ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதாவது இஸ்லாமிய மாதங்களில் 9-வது மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இந்த நோன்பை கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

அன்று முதல் ஒரு மாத காலம் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த நோன்பு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு மகிழ்ச்சியோடு ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் நகர ஜூம்மா பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு, ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர், வெங்கனூர், திருமானூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், விக்கிரமங்கலம், செந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story