ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

ரம்ஜான் பண்டிகை

உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்று. முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் மாத நோன்பை கடைபிடிக்கும் விதமாக புனித ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதாவது இஸ்லாமிய மாதங்களில் 9-வது மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இந்த நோன்பை கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

அன்று முதல் ஒரு மாத காலம் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த நோன்பு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திலும் இந்த பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடினர்.

புத்தாடை அணிந்து...

இதையொட்டி முஸ்லிம்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு மகிழ்ச்சியோடு ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் நேற்று காலை பெரம்பலூர் டவுன் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர்.

அங்கு அனைத்து முஸ்லிம்களும் ஒன்று கூடி நடத்திய சிறப்பு தொழுகை டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி அல்லா பிச்சை தலைமையில் நடந்தது. டவுன் பள்ளிவாசல் இமாம் சல்மான் ஹஜ்ரத் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார்.

கட்டித்தழுவி வாழ்த்துகள்

நூர் பள்ளிவாசல் ஹஜ்ரத் முஸ்தபா திருக்குர்ஆன் வசனமான குத்பாவை ஓதினார். ரம்ஜான் நோன்பின் மாண்புகள், பெருமகனார் நபி (ஸல்) ஆற்றிய இறைபணிகள், ஈகையின் அவசியம், அன்பு, சகோதரத்துவத்தை நிலை நாட்டவேண்டியதின் அவசியம் குறித்து ஹஜ்ரத்துகள் சிறப்புரை ஆற்றினர். தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். சிறுவர்களும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். சிறப்பு தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு பிரார்த்தனை (தூ-ஆ) நடத்திய பின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு கணபதி நகரில் திறந்த வெளியில் தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் அமைப்பு ஏற்பாட்டில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லெப்பைக்குடிகாடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லா மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விசுவக்குடி, முகம்மதுபட்டினம், வி.களத்தூர், வாலிகண்டபுரம், தேவையூர், பாடாலூர், டி.களத்தூர், ரஞ்சன்குடிகோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் பிரியாணி உள்ளிட்ட அறுசுவை விருந்து சமைத்து உறவினர்கள், நண்பர்கள், ஏழை-எளிய மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.


Next Story