பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


தினத்தந்தி 30 Jun 2023 12:28 AM IST (Updated: 30 Jun 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.

பெரம்பலூர்

பக்ரீத் பண்டிகை

முஸ்லிம்களின் தியாக திருநாளாக போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடினர். பெரம்பலூரில் மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி அல்லா பிச்சை தலைமையில் நடந்தது. டவுன் பள்ளிவாசல் பேஸ் இமாம் சல்மான் ஹஜ்ரத் முன்னின்று சிறப்பு தொழுகையை நடத்தினார்.

நூர் பள்ளிவாசல் ஹஜ்ரத் முஸ்தபா கொத்பா ஓதினார். இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். இதேபோல் துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து தொழுகையில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்

தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். முஸ்லிம் சிறுவர்-சிறுமிகளும் ஒருவருக்கொருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பிறகு முஸ்லிம்கள் மாடு, ஆடுகளின் இறைச்சிகளை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானியாக கொடுத்து மகிழ்ந்தனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு கணபதி நகரில் திறந்த வெளியில் தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் அமைப்பு ஏற்பாட்டில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் லெப்பைக்குடிகாடு, வி.களத்தூர், வாலிகண்டபுரம், தேவையூர், விசுவக்குடி, முகமதுபட்டினம், பாடாலூர், டி.களத்தூர் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.



Next Story