பழனி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள்
வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை தாம்பூலத்திலும், ஒரு பீரோவை ஆட்டோவிலும் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பழனி,
பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பழனி, நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் பெரியகலையம்புத்தூர் ஜமாத் சார்பில், அங்கு வாழும் முஸ்லிம்கள் ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி மதநல்லிணக்கத்தை பறை சாற்றினர். முன்னதாக பெரியகலையம்புத்தூர் பள்ளிவாசலில் இருந்து வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை தாம்பூலத்திலும், ஒரு பீரோவை ஆட்டோவிலும் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கோவில் அருகே வந்தபோது, கோவில் நிர்வாகிகள் சார்பில் முஸ்லிம்களை பொன்னாடை அணிவித்து வரவேற்று உபசரித்தனர். இதைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று முஸ்லிம்கள் சீர்வரிசை பொருட்களை வழங்கினர். மேலும் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் அனைவரும் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இதுகுறித்து முஸ்லிம்கள் கூறும்போது, 'எங்கள் ஊரில் இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். பள்ளிவாசலில் ஏதும் நிகழ்ச்சி என்றால் இந்துக்களுக்கு முறைப்படி அழைப்பு கொடுப்போம். அவர்களும் வந்து கலந்து கொள்வார்கள். அதன்படி கோவில் கும்பாபிஷேகத்துக்கு இந்துக்கள் சார்பில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜமாத் சார்பில், நாங்கள் சீர்வரிசை பொருட்களை வழங்கி கலந்து கொண்டோம்' என்றனர்.