தென்காசியில் முஸ்லிம் லீக் பேச்சாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு; ரவுடிக்கு போலீசார் வலைவீச்சு
தென்காசி பாறையடி 2-வது தெருவை சேர்ந்தவர் முகம்மது அலி (வயது 45). இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளராக உள்ளார்.
தென்காசி,
தென்காசி பாறையடி 2-வது தெருவை சேர்ந்தவர் முகம்மது அலி (வயது 45). இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளராக உள்ளார். வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த முகம்மது அலி நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகில் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சாகுல் என்ற ரவுடி திடீரென அரிவாளால் முகம்மது அலியின் கழுத்து மற்றும் கையில் சரமாரியாக வெட்டினார். திடீரென தாக்கியதால் நிலைகுலைந்து போன முகம்மது அலி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அரிவால் வெட்டில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த முகம்மது அலி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரை தாக்கிய ரவுடி சாகுல் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் போலீசில் சிக்காமல் ஒரு குளத்திற்குள் பதுங்கி இருந்தார். அப்போது தென்காசி போலீசார் டிரோன் கேமரா மூலம் அவரை கண்டுபிடித்து கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து இருந்தனர். தண்டனை காலம் முடிந்து தற்போது தான் அவர் வெளியே வந்துள்ளார். வந்த சில நாட்களில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவரை போலீசார் தேடுகிறார்கள்.