முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருப்பூரில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திரம்
திருப்பூர் மாநகரில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்த வகையில் திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரம், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியசாமிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் விரதம் இருந்து பங்குனி உத்திர விழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பூர் கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார, தீபாராதனை நடந்தது. தேவியருடன் கந்தபெருமான் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு வழிபாடு
திருப்பூர் பூச்சக்காடு ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திரவியங்களால் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பெண்கள் கந்தசஷ்டி பாராயணம் செய்ய முருக பக்தர்கள் ஆன்மிக கீர்த்தனைகளுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.