கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன - வி.சி.க. எம்.பி. ரவிகுமார்


கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன - வி.சி.க. எம்.பி. ரவிகுமார்
x

கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானது என்று ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மாநாட்டை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். அதன்பிறகு மாநாட்டு கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாநாட்டில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சேகர்பாபு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள், தமிழக ஆதீனங்கள், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

மாநாட்டை காண தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதேபோல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் 2-வது நாளான நேற்று மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் நேற்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள்,

5வது தீர்மானமாக : " முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது." எனவும்;

8வது தீர்மானமாக : " விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோவில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது." எனவும் ;

12வது தீர்மானமாக : " முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது." எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பா.ஜ.க. அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல.

இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது மற்றொரு எக்ஸ் வலைதள பதிவில், "முத்தமிழ் முருகன் மாநாடு சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தைப் புகுத்தும் நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும்.

ஏனென்றால் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் இந்து அடையாளத்துக்குள் நீண்ட காலத்துக்கு முன்பே உள்வாங்கப்பட்டுவிட்டார். முருகக் கடவுளுக்கு ஆடு அறுத்துப் படையிலிடப்பட்டது என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அப்படி பக்தர்கள் இப்போது படையலிட முடியாது. முருகனும் மற்ற தமிழ்க் கடவுள்களும் இந்து அடையாளத்துக்குள் எப்போதோ உள்வாங்கப்பட்டுவிட்டனர்" என்று அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story