ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை: கடிதம் சிக்கியது


ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை: கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 23 April 2024 3:33 PM IST (Updated: 23 April 2024 5:20 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பள்ளிக்கரணையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நபரின் மனைவி தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் விவரம் வெளியாகியுள்ளது.

சென்னை,

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 26). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர் பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடையன் பேட்டை கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா(22) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். இதற்கு ஷர்மிளாவின் வீட்டார் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிரவீனும், ஷர்மிளாவும் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதுடன், எழும்பூரில் உள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர். இதன் பின்னர் அவர்கள் இருவரும் பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தனர். கூலி மற்றும் மெக்கானிக் தொழில் செய்து வந்த பிரவீன் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 8:30 மணியளவில் பள்ளிக்கரணை பிரதான சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதிக்கு சென்றார். அப்போது 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் பிரவீனை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது.

தாம்பரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஷர்மிளாவின் சகோதரரான ஜல்லடையம்பேட்டை முதல் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (எ) குட்டி அப்பு (23) மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மிளா வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்டதால் அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த ஷர்மிளா, கடந்த 14-ம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கழுத்து எலும்பு, நரம்பு, பாதிக்கப்பட்டதால் ஷர்மிளா கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், ஷர்மிளா தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில் தனது மரணத்திற்கு தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது சகோதரர் நரேஷ் ஆகியோரே காரணம் என்று குறிப்பிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றும் வரை உடலை வாங்க முடியாது என்று ஷர்மிளாவின் உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


Next Story