கொல்லிமலையில் பயங்கரம்:நிதிநிறுவன அதிபர் கடத்தி கொலை4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை


கொல்லிமலையில் பயங்கரம்:நிதிநிறுவன அதிபர் கடத்தி கொலை4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 7 March 2023 12:30 AM IST (Updated: 7 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் நிதிநிறுவன அதிபர் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி நிறுவன அதிபர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள குமரிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவருக்கு சத்யா (37) என்ற மனைவியும், கவுதம் (18), நந்தகுமார் (16) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சரவணன், அவருடைய தோழி மகாலட்சுமி ஆகியோர் கூட்டாக நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள ஆசிரியர் காலனியில் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். மேலும் சரவணன் அரிசி வியாபாரத்தையும் செய்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 3-ந் தேதி சரவணனை மர்ம நபர்கள் கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர் அவரை தங்கும் விடுதியில் உள்ள அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டினர்.

கொலை

இதையடுத்து சரவணன் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதற்கிடையே நேற்று காலை சரவணன் தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அறிந்த விடுதி மேலாளர் வாழவந்தி நாடு கிராம அலுவலர் கிருஷ்ண குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுதொடர்பாக வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணை

இந்த கொலை தொடர்பாக போலீசார் எருமப்பட்டி அருகே பண்ணக்காரன் பட்டியை சேர்ந்த நாகராஜ் (36), நாமக்கல் காவேட்டிப்பட்டியை சேர்ந்த வினோத், நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்த ஜோசப் மற்றும் கவின் ஆகிய 4 பேரை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிந்த பிறகே நிதிநிறுவன அதிபர் சரவணன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதமா? கொடுக்கல் வாங்கல் தகராறா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். நிதி நிறுவன அதிபர் கடத்தி சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story