ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்அ.தி.மு.க.விற்கு அரசியல் ரீதியாக வெற்றி கிடைத்துள்ளதுகே.பி.முனுசாமி பேட்டி
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நேற்று அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு தோல்வி என்றாலும் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சி அ.தி.மு.க. தான் என மீண்டும் நிரூபித்துள்ளோம். இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த வேலையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட சலசலப்பால் தான் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் போட்டியிடுவார்கள்.
இடைத்தேர்தலில் வெற்றி ஒரு போதும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல், மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.