கோபி பகுதியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு
கோபி பகுதியில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு
கடத்தூர்
கோபி நகராட்சி பகுதிகளில், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மின் நகர் மற்றும் பிருந்தாவன் கார்டன் பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பூங்கா அமைப்பதற்கான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுமான பணிகளையும், மொடச்சூர் வாரச்சந்தை கடைகள் கட்டுமான பணிகளையும், அறிவு சார் மையம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் டாய்லெட் பணிகள், திடக்கழிவு மேலாண்மையில் நுண் உர கூட செயலாக்க மைய பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது திடக்கழிவு மேலாண்மையில் 100 சதவீதம் அறிவியல் முறைப்படி செயலாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அதற்கு தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க செயல்திட்டம் மற்றும் மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது, நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ், நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) சிவக்குமார், உதவி பொறியாளர்கள் ராஜேஷ், பிரேமா, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன் மற்றும் பொது பணி மேற்பார்வையாளர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.