சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய நகராட்சி கடைகள்
விழுப்புரத்தில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிய நகராட்சி கடைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா
விழுப்புரம்
விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 20 கடைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு அந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டன. அந்த கடைகளை நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது பராமரிப்பு செய்யவில்லை. இதனால் அங்குள்ள கடைகள் அமைந்துள்ள கட்டிடம் அனைத்தும் காலப்போக்கில் சேதமடைந்தது. இதனால் ஒவ்வொருவராக கடையை காலி செய்யத்தொடங்கினர். கடந்த 2018-ம் ஆண்டில் அனைத்து கடைகளும் காலியானது. அதன் பிறகு கடைகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு நகராட்சி நிர்வாகம் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை சமூகவிரோதிகள் தற்போது தங்களுக்கு சாதகமாக அங்குள்ள கடைகள் முன்பு அமர்ந்து மதுகுடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் காலி மதுபாட்டில்களை கடைகள் முன்பு உடைத்தெறிந்துவிட்டு செல்வது, புகை பிடிப்பது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் செயல்களை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்,பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நகராட்சி நிர்வாகம் கடைகளை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் காய்கறி வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் ஜானகிபுரத்தில் மொத்த காய்கறி மார்க்கெட் இயங்கி வருவதால் வெகுதூரம் சென்று காய்கறி வாங்க முடியாமல் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள கடைகளை சீரமைத்து அங்கு காய்கறி மார்க்கெட் கொண்டு வந்தாலும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?