குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Aug 2023 12:30 AM IST (Updated: 9 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

கடையநல்லூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நகராட்சி சார்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், கருப்பாநதி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்பட்டு வந்தது.

பொதுமக்கள் முற்றுகை

நகராட்சி பகுதிகளில் தற்போது 5 நாட்களுக்கு ஒரு முறையும், சில பகுதிகளில் 8 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்படுவதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க வலியுறுத்தி கடையநல்லூர் நகராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் ரேவதி பாலீஸ்வரர் தலைமையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

ஆனால் அங்கு ஆணையாளர் இல்லாததால் அலுவலக அறையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நகராட்சி கூட்டரங்கில் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் கவுன்சிலர்களுக்கு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தை

அப்போது திடீரென கூட்ட அரங்கிற்குள் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து நகராட்சி தலைவர், பொறியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் கூறுகையில், பருவமழை பொய்த்ததால் பெரியாற்று படுகை வறண்டு காணப்படுகிறது. இதனால் நகராட்சி ஆற்றுப்படுகை கரைகளில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 13 கிணறுகளிலும் குடிநீர் வற்றியதாலும், நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், கருப்பாநதி, கல்லாறு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைப்பது குறைந்துவிட்டது. எனினும் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story