குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகை
x

களக்காட்டில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காட்டில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

களக்காடு நகராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும், வடகரை பச்சையாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறு மூலமும், ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக களக்காடு பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சிங்கிகுளம் நீரேற்று நிலையத்தில் இருந்து களக்காட்டிற்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்குள்ள 2 மின் மோட்டார்களும் பழுதடைந்ததாகவும், அதனால் நீரேற்றம் செய்வது தடைபட்டு களக்காட்டிற்கு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர்.

முற்றுகை

இந்தநிலையில் களக்காடு கோவில்பத்து, மேலத்தெரு, குண்டு தெரு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்தும், சீரான குடிநீர் வழங்கக்கோரியும், களக்காடு நகராட்சி அலுவலகத்தை நேற்று கோவில்பத்தை சேர்ந்த பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகையிட்டனர். அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரெங்கசாமி, இசக்கி பாண்டியன், மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள், நாங்கள் முறையாக தண்ணீர் கட்டணம் செலுத்தியும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்கை கடைபிடிப்பதாக புகார் தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் தங்களது வீட்டு குடிநீர் இணைப்புகளை நகராட்சியிடம் திரும்ப ஒப்படைப்பதாக பொதுமக்கள் கையெழுத்துயிடப்பட்ட மனுவை நகராட்சி பொறியாளர் சரவணனிடம் கொடுத்து விட்டு, நகராட்சிக்கு குடிநீர் கட்டணமும் செலுத்த மாட்டோம் என்று கூறியவாறு கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story