46 மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்
46 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிலர் வீட்டில் வளர்க்கும் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். அவை நகரில் ஆங்காங்கே சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து வி.சி.க. நகர் செயலாளர் பாசித் இலியாஸ் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், தெருவில் திரியும் மாடுகளை உடனடியாக பிடிக்க ஆணையிட்டார். அதன் பேரில் கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா தலைமையிலான குழுவினர் கீழக்கரை நகராட்சியில் தெருக்களில் சுற்றி திரிந்த 46 மாடுகளை பிடித்து அடைத்தனர். 3 நாட்களுக்குள் நகராட்சிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்திய பின்பு மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை மீட்டு செல்ல வேண்டும் என்றும், மீறும் பட்சத்தில் கால்நடை பராமரிப்பு நிலையத்தில் அனைத்து மாடுகளும் ஒப்படைக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் கூறினார்.