ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது


ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2023 1:30 AM IST (Updated: 2 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி

கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட வரைபட அனுமதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி மணியம்மை வீதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 43). இவர் தனக்கு சொந்தமான 1,200 சதுர அடி கொண்ட ஓட்டு வீட்டினை இடித்து விட்டு, புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்தார். இதற்காக கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு கடந்த மாதம் 23-ந் தேதி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் அளவுமானி கணக்கீட்டாளர் நடராஜ் என்பவரிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை கொடுத்தார்.

தொடர்ந்து நடராஜ் கூறியபடி கட்டிட வரைபட அனுமதிக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் நல நிதிக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு, அந்த ரசீதை காண்பித்து உள்ளார். அதன் பின்னர் நடராஜ் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.10 ஆயிரத்து 450-ஐ செலுத்தி விட்டு, தனக்கு தனியாக ரூ.5 ஆயிரம் கொடுத்தால் கட்டிட வரைபட அனுமதிக்கு ஒப்புதல் வாங்கி தரப்படும் என்று கூறியதாக தெரிகிறது. ஹரிகரன் தனது குடும்ப கஷ்டத்தை எடுத்து கூறியும், நடராஜ் விடாப்பிடியாக லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

பேரூராட்சி ஊழியர் கைது

இதுகுறித்து ஹரிகரன் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்துடன் ஹரிகரன் நேற்று முன்தினம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அந்த பணத்தை அலுவலகத்தில் பணிபுரியும் சசிகலா என்பவரிடம் கொடுக்குமாறு நடராஜ் அறிவுறுத்தினார். அதன் பேரில் பணத்தை சசிகலா வாங்கினார். அப்போது அவரை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், நடராஜ் கூறியதன் பேரில் தான் பணத்தை வாங்கியதாகவும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடராஜிடம் நேற்று முன்தினம் இரவு போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதில் அவர் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு நடராஜை போலீசார் கைது செய்தனர்.



Next Story