பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும்; சத்தி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை
பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என்று சத்தி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சத்தியமங்கலம்
பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என்று சத்தி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரியை குறைக்க வேண்டும்
சத்தியமங்கலம் மாதாந்திர நகராட்சி கவுன்சில் கூட்டம் அதன் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு)ரவி, துணைத்தலைவர் ஆர்.நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
லட்சுமணன்(அ.தி.மு.க.):- பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கு வரி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை குறைக்க வேண்டும்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- இது குறித்து உயர் அதிகாரிகளுடன் கேட்டபோது வரியை குறைக்க இயலாது என தெரிவித்து விட்டார்கள். இருப்பினும் நாம் குறைக்க முயற்சி எடுப்போம்.
மின்மோட்டார் பழுது
எஸ்.எல்.வேலுச்சாமி (தி.மு.க.):- கம்பத்தராயன் புதூரில் உள்ள மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை உடனே சரி செய்து தர வேண்டும். மேலும் இரும்பு பழைய பொருட்கள் மற்றும் பழைய வாகனங்கள் ஏலம் விடும்போது குறைந்த விலைக்கு கேட்பதால் மறு ஏலம் நடத்த வேண்டும். தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- குறைந்த விலை என்றால் மீண்டும் ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் கூறிய மின்மோட்டார் பழுது உடனடியாக நீக்க ஏற்பாடு செய்யப்படும்.
பாராட்டு
உமா (பா.ஜ.க.):- நகராட்சி கூட்டம் நடக்கும் போது தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிவில் தேசிய கீதம் பாட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் கூட்ட முடிவில் சத்தியமங்கலம் நகராட்சி வருவாய் அதிகாரி மற்றும் வரி வசூல் செய்பவர்கள் அழைக்கப்பட்டனர்.
பின்னர் தொழில் வரி, குப்பை வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பகுதியினங்கள் 100 சதவீதமும், சொத்துவரி மற்றும் காலியிடவரி 90 சதவீதமும் வசூல் செய்ததற்கு நகராட்சி வரி வசூல் பிரிவு பணியாளர்களை நகராட்சி தலைவர் பாராட்டினார்.