ரூ.10 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம்; நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
நெல்லை அருகே ரூ.10 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடத்துக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாளன்குளம் ஊராட்சியில் முத்தன்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். சாலை வசதி, நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் தங்கள் குளங்களில் உள்ள மடைகளை சரிசெய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
நெல்லை திருத்து மக்கள், தங்கள் ஊரில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்களுக்கு போக்குவரத்து கழகம் வழங்கக்கூடிய பணப்பலன்கள் முறையாக கிடைக்கவில்லை. இதுகுறித்து சட்டசபையில் பேசி எங்களுக்கு பணப்பலன்களை பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.