சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக 142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக 142 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
x

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் கேரளாவுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் பலப்படுத்தும் பணிக்காக கடந்த 1979-ம் ஆண்டு நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. பணிகள் முடிந்தபிறகு நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு முட்டுக்கட்டை போட்டது.

பின்னர் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில், நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. பின்னர் வடகிழக்கு பருவமழையும் சீராக பெய்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாத காலமாக உயர்ந்து வந்தது. கடந்த 3-ந்தேதி அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரள மாநில பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

கடந்த 14-ந்தேதி நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதனால் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவது தள்ளிப்போனது.

142 அடியை எட்டியது

நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 141.80 அடியாக இருந்தது. நள்ளிரவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் காலை 10 மணியளவில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,687 கன அடியாக இருந்தது.

நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் கேரளாவுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவும் அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. 142 அடியை எட்டியதை தொடர்ந்து வினாடிக்கு 1,867 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

5-வது முறை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 5-வது முறையாக நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதற்கு முன்பு 2014, 2015, 2018, 2021-ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தேனி அருகே பாலார்பட்டியை சேர்ந்த விவசாயிகள் அங்கு ஓடும் முல்லைப்பெரியாற்றில் மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story